நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1.51 லட்சம் மீட்பு போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் வழங்கினார்


நாமக்கல் மாவட்டத்தில்  இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1.51 லட்சம் மீட்பு  போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் வழங்கினார்
x

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த தொகையை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த தொகையை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.

போலீசில் புகார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனக்கு வந்த குறுந்தகவல் லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை கொடுத்த பிறகு தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.74 ஆயிரத்தை எடுத்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு விசாரணை செய்தனர். இறுதியாக ரூ.74 ஆயிரம் மீட்கப்பட்டு சுரேஷ்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் தனக்கு வந்த செல்போன் அழைப்பில் கடன் தருவதாக கூறியதை நம்பி வங்கி விவரங்களை கொடுத்து உள்ளார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டு, இன்சூரன்ஸ் பாலிசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூ.40 ஆயிரத்தை மீட்டு மீண்டும் மஞ்சுளாவிடம் கொடுத்தனர்.

ரூ.1.51 லட்சம் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் தனது வங்கி கணக்கு இருப்பு தொகையை சரிபார்ப்பதற்காக தவறுதலாக செல்போன எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவித்ததால், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.37 ஆயிரத்து 447 எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.37 ஆயிரத்து 447-ஐ மீட்டு சரஸ்வதியிடம் ஒப்படைத்தனர்.

மொத்தமாக இணையவழி குற்றங்கள் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 447 மீட்கப்பட்டது. இந்த தொகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.


Next Story