டெல்டாவின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிய 'கஜா புயல்' துயர நினைவலைகள்


டெல்டாவின் வாழ்வாதாரத்தை வாரி சுருட்டிய  கஜா புயல் துயர நினைவலைகள்
x

கடந்த 2018-ம் ஆண்டு இதே நாள் (நவம்பர் 16) காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் உருக்குலைந்து சின்னாபின்னமாகி இருந்தன. ஒரு இரவில் வீசிய கோர காற்று ஒட்டுமொத்த டெல்டாவின் வாழ்வாதாரத்தையும் வாரி சுருட்டி சென்றது, இன்றளவும் டெல்டா மக்களின் மனதில் துயர நினைவலைகளாக வீசிக்கொண்டிருக்கிறது.

தஞ்சாவூர்

கடந்த 2018-ம் ஆண்டு இதே நாள் (நவம்பர் 16) காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் உருக்குலைந்து சின்னாபின்னமாகி இருந்தன. ஒரு இரவில் வீசிய கோர காற்று ஒட்டுமொத்த டெல்டாவின் வாழ்வாதாரத்தையும் வாரி சுருட்டி சென்றது, இன்றளவும் டெல்டா மக்களின் மனதில் துயர நினைவலைகளாக வீசிக்கொண்டிருக்கிறது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என காவிரித்தாயின் கரை எங்கும் கஜா புயலால் அலங்கோலமாக மாறியது. ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் அதையொட்டி ஊரின் எல்லைப்புறங்களில் அலங்கார தூண்களாக இருந்த தென்னை மரங்களின் இறுதி நாளாக மாறி விட்டது கஜா புயல் வீசிய அந்நாள்.

துண்டிக்கப்பட்ட மாவட்டங்கள்

முந்தைய நாளில் குடும்பத்தினருடன் இளநீர் ருசித்த தென்னந்தோப்புகள் அடுத்த நாள் ஒப்பாரி வைக்கும் இடமாக மாறும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தாங்கள் பெற்ற பிள்ளையைப்போன்று தாங்கள் வளர்த்த தென்னம்பிள்ளைகள் தலைநிமிர்ந்து நின்ற காட்சியை நாள்தோறும் பார்த்து பார்த்து மகிழ்ந்த விவசாயிகள், ஒரே நாள் இரவில் தலைசாய்ந்து தரையில் வீழ்ந்து கிடந்ததை பார்த்து நெஞ்சிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதனர்.

சாலை நெடுகிலும் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்து கிடந்தன. வலிமையான இரும்பு மின் கம்பங்களை கூட புயலின் கோர தாண்டவம் சுருட்டி விட்டதை மக்கள் கண்கூட கண்ணீர் வடித்து பாத்த்தனர். பிற மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டு, வீடுகள், தோப்புகளை இழந்த மக்கள் உதவிக்காக அபயக்குரல் எழுப்பினர்.

குறி வைத்து அழித்த புயல்

டெல்டாவின் கடைக்கோடி பகுதி மக்கள் பல வாரங்களை மின்சாரம், தண்ணீர் இன்றி கடத்தினர். வீடு, தோட்டம் மற்றும் உடைமைகளை இழந்த மக்கள் துயரத்துடன், பசியுடனும் பல நாட்களாக தவித்தனர். இந்த அத்தனை துயரங்களுக்கும் காரணம், வங்க கடலில் உருவாகி 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் ேததி நள்ளிரவில் கரையை கடந்த 'கஜா' எனும் கோரப்புயல்.

டெல்டாவின் உயிர் நாடியான கடைமடை பகுதிகளில் கஜா புயல் மிகுந்த பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையல்ல.

சோக நினைவலைகள்

இதேபோல பணம் தரும் மரங்கள், பயிர்கள், ஆடு, மாடுகள் என அனைத்தையும் கஜா காவு வாங்கியதால், புயல் கரையை கடந்து 4 ஆண்டுகளாகியும் அதன் சோக நினைவலைகளில் இருந்து மீண்டு வெளிவர முடியாமல் காவிரி டெல்டா மக்கள் தவிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கயிறு தொழிற்சாலைகளை காணாமல் ஆக்கிய புயல், மீனவர்களின் விருப்பமிகு வாகனமான மீன்பிடி படகுகளை சுக்கு நூறாக்கியது.

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வலுவான படகுகள் உடைந்து சின்னாபின்னமாக கிடந்ததை நினைத்து மீனவர்கள் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை.

50 ஆண்டு காலம்...

கஜா புயல் டெல்டா மக்களை பொருளாதாரத்தில் 50 ஆண்டுகாலம் பின்நோக்கி தூக்கி எறிந்து சென்றது. கஜா புயல் கரையை தொட்டு, சூறையாடி கடந்து சென்றதற்கு பிந்தைய ஒவ்வொரு நாளும் டெல்டா மக்களுக்கு ரணமாக நாட்கள்தான்.. புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை நட்டு, புயலுக்கு முந்தைய வாழ்க்கையை நினைத்து இன்றளவும் சோக கதை பேசுகின்றனர் டெல்டா மக்கள்.

மீனவர்கள் அரசு வழங்கிய நிவாரணம் போதவில்லை என இன்றளவும் தங்களுடைய வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். கயிறு தொழிற்சாலைகளுக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. புயல் பாதித்து 6 மாதங்களுக்கு பின் தென்னை ஒன்றுக்கு ரூ.1,100 வீதம் அரசு நிவாரணம் வழங்கியது. அதன்பின் பெரும்பாலான இடங்களில் தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

புயலுக்கு பறிகொடுத்த மரங்களை ஈடுகட்டும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விதைப் பந்துகள் தயார் செய்து வினியோகித்தன. சேதுபாவாத்திரம் பகுதியில் புயலுக்கு பிறகு ஒரு சில கயிறு தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

புயல் தந்த இழப்பை ஈடுகட்ட மா, பலா போன்ற மரக்கன்றுகள் இன்றளவும் நடப்பட்டு வருகின்றன. தங்களது உயிரை மட்டும் விட்டு விட்டு உடைமைகளை கஜா புயல் பறித்து சென்று விட்டதே என டெல்டா மக்கள் இன்றளவும் கண்ணீர் வடிக்கின்றனர்.


Next Story