சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை;தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள்கடலுக்கு செல்லவில்லை
சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
பலத்த சூறாவளி காற்று வீசும் என்ற எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
சூறாவளி காற்று
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மேகமூட்டம் வந்து செல்கிறது. நேற்று காலை முதல் கடும் வெயில் மக்களை வாட்டியது. லேசான காற்றும் வீசியது.
இந்த நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கடலுக்கு செல்லவில்லை
இதையடுத்து மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவ கிராம நிர்வாகிகளுக்கு கடலில் சூறாவளி காற்று வீசுவது குறித்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கொடுத்தனர்.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சுமார் 245 விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.