தினத்தந்தி புகார் பெட்டி-மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி-மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கோயம்புத்தூர்

பராமரிப்பு இல்லாத கழிப்பறை

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி தொட்டதாசனூர் கிராமத்தில் பொது கழிப்பறை பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த கழிப்பறையை சுற்றிலும் புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதன்காரணமாக கழிப்பறை இருந்தும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, புதர்களை வெட்டி அகற்றுவதுடன், தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும்.

ரவி, தொட்டதாசனூர்.

அரசு பஸ் சீரமைக்கப்படுமா?

பொள்ளாச்சியில் இருந்து சூலக்கல், ஆதியூர் வழியாக முத்துமலை ஆண்டவர் கோவில் வரை அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தினமும் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்தநிலையில் பஸ் மேற்கூரை மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. ஒரு சில இடங்களில் மேற்கூரை பெயர்ந்து உள்ளது. மழைக்காலங்களில் பஸ்சிற்குள் மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். ஆகவே, பஸ் மேற்கூரையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பஸ் இயக்க வேண்டும்.

முத்தமிழன், பொள்ளாச்சி.

வாகன விபத்துகள்

அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அப்பகுதியில் போலீசார் முறையாக ரோந்து செல்லாததால் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, போலீசார் ரோந்து செல்வதுடன், தீவிரமாக கண்காணித்து போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஸ் கோபால், அருவங்காடு.

வாகன ஓட்டிகள் அவதி

கோவை வெள்ளக்கிணறு ரெயில்வே கேட் பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வாகனங்கள் தடுமாறுகின்றன. இரு சக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் மோசமான இந்த சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை எடுத்து கூறியும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சீரமைக்க வேண்டும்.

ராஜா, வெள்ளக்கிணறு.

தெருநாய்கள் தொல்லை

கோவை மாநகராட்சி 86-வது வார்டுக்கு உட்பட்ட கரும்புகடை பகுதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்தது. தற்போது அந்த சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இந்த பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து, வேறு பகுதிகளில் விட வேண்டும். மேலும் அதற்கு கருத்தடை செய்ய வேண்டும்.

உஸ்மான், கரும்புகடை.

பயணிகள் அவதி

கோவை பீளமேடு சிக்னல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. தினமும் இங்கு மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் பஸ்சில் செல்ல காத்திருக்கின்றனர். அதன் அருகே சாலையில் ஒரு குழி உள்ளது. இதனால் வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் குழியில் இறங்கி செல்லும் போது, தடுமாறி பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள் மீது மோதும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் கால் இடறி கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, இந்த குழியை சீரமைக்க வேண்டும்.

ஜேம்ஸ், பீளமேடு.

பல்லாங்குழி சாலை

கோவை மாநகராட்சி 32-வது வார்டு நல்லாம்பாளையம் செல்லும் ராஜீவ்காந்தி சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பல்லாங்குழி சாலையாக மாறியது. மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது குழிக்குள் தவறி விழும் நிலை தொடர்கிறது. எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

பொன்னி, கணபதி.

மூடப்படாத குழி

கோவை மாநகராட்சி 20-வது வார்டு ஜானகி நகரில் கடந்த மாதம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் குழி தோண்டப்பட்டது. அந்த குழி சரிவர மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் சாலை மேடு, பள்ளமாக இருக்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். ஆகவே, விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் குழியை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

கண்ணன், ஜானகி நகர்.


Next Story