தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம், குந்தாணி பாளையம் நத்தமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் பயன்படுத்தி வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகள் , குப்பைகள் ஆகியவற்றை பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் போடாமல் சாலையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நந்தமேடு.
வேகமாக செல்லும் லாரிகளால் விபத்து
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து லாரிகளில் ஏராளமான ஆரளைக் கற்களை ஏற்றிக்கொண்டு கரூர், நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று கற்களை இறக்கிவிட்டு வருகின்றனர் .அவ்வாறு லாரிகளில் கற்களை கொண்டு செல்லும் போது லாரியின் பாடி மட்டத்திற்கு மேல் கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்கின்றனர். இதனால் பாடி மட்டத்திற்கு மேல் உள்ள கற்கள் லாரி நிலை தடுமாறும் போதும், மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கும்போதும் கீழே விழுந்து வருகிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கற்கள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட லாரி டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புன்னம் சத்திரம்.
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே பயணிகள் நிழற்குடை அருகே சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நெடுகிலும் அந்த வழியாக செல்லும் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் அந்த பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வந்து வாகனத்தை எடுக்கின்றனர். இதற்கிடையில் அந்த வழியாக சேலத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அப்போது ஒரு வாகனத்தோடு மற்றொரு வாகனம் முந்திக்கொண்டு செல்வதால் சாலை ஓரத்தில் நிற்கும் வாகனங்கள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தளவாபாளையம்.
சேதமடைந்த மின்கம்பம்
கரூர் மாவட்டம், நங்கவரம் பேரூராட்சி வடக்கு மாடு விழுந்தான் பாறையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நங்கவரம்.
நாய்கள் தொல்லை
கரூர் நகரப்பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்.