'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு
நெல்லை- அம்பை மெயின் ரோட்டில் முன்னீர்பள்ளம் ரெயில்வே மேம்பாலத்தில் சாலையின் இருபுறமும் மண் குவிந்துள்ளதாக தேவராஜ் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு கிடந்த மண் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
டாக்டர்கள் நியமிக்க வேண்டும்
நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, அறுவை சிகிச்சை டாக்டர்கள் மற்றும் எக்ஸ்ரே ஆய்வக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டுகிறேன்.
-பேச்சிமுத்து, நாங்குநேரி.
குண்டும் குழியுமான சாலை
மூலைக்கரைப்பட்டி- முனைஞ்சிப்பட்டி மெயின் ரோட்டில் வெள்ளநீர் கால்வாய் பாலத்தின் அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-பார்வதிமோகன், மூலைக்கரைப்பட்டி.
சேதமடைந்த வாறுகால்
பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் மெயின் ரோட்டில் தொடக்கப்பள்ளி அருகில் வாறுகாலின் கான்கிரீட் மூடி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-குருசாமி, பாளையங்கோட்டை.
தெருநாய்கள் தொல்லை
அம்பை இல்லத்தார் தெற்கு தெரு, வடக்கு தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-சண்முகவேல், அம்பை.
* தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-கிரிஷ், எட்டயபுரம்.
குடிநீர் தட்டுப்பாடு
சாத்தான்குளம் அருகே வடக்கு பன்னம்பாறை கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு கூடுதலாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ராஜா, வடக்கு பன்னம்பாறை.
ஓடை தூர்வாரப்படுமா?
தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவில் பக்கிள் ஓடையில் அமலைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே ஓடையை தூர்வாருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.
-ராஜசேகர், தூத்துக்குடி.
பராமரிப்பற்ற சுகாதார வளாகம்
உடன்குடி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பொது சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அங்கு இரவில் மின்விளக்கு எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டுகிறேன்.
-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.
ஊர் பெயர் பலகை தேவை
கோவில்பட்டி அருகே விஜயாபுரி கிராம எல்லையில் ஊர் பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு ஊர் பெயர் பலகை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-முருகன், கோவில்பட்டி.
குளத்தின் ஷட்டர் சேதம்
சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து சக்கம்மாள்புரம் மருதாணிகுட்டம் குளத்தின் மறுகால் தடுப்புசுவர் மற்றும் ஷட்டர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் குளத்தில் தண்ணீரை தேக்க முடியாத நிலை உள்ளது. எனவே குளத்தின் தடுப்புச்சுவர் மற்றும் ஷட்டரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ஜெபஸ்டின், சக்கம்மாள்புரம்.
புகார் பெட்டி செய்தி எதிரொலி; புதிய சாலை அமைப்பு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்சாயத்து திருமலாபுரம்- ராமநாதபுரம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாக மாரிமுத்து என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
வேகத்தடை வேண்டும்
கடையம் அருகே திருமலையப்பபுரம் பள்ளிக்கூடம் அருகில் சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-திருக்குமரன், கடையம்.
ரெயில்வே கேட்டில் மேம்பாலம் தேவை
சங்கரன்கோவில்- ராஜபாளையம் மெயின் ரோட்டில் என்.ஜி.ஓ. காலனியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. செங்கோட்டை- மதுரை இடையிலான ரெயில்கள் செல்லும்போது ரெயில்வே கேட் மூடப்படுவதால், சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.
சேதமடைந்த சாலை
பொட்டல்புதூர் நடுத்தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து குடிநீர் குழாயை பதித்த பின்னர் சாலையை சரிவர மூடி சீரமைக்காமல் சென்று விட்டனர். இதனால் குண்டும் குழியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.
-ஷேக் மன்சூர் அலி, பொட்டல்புதூர்.
வாறுகாலை சீரமைக்க வேண்டும்
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 8-வது வார்டு பள்ளிக்கூடம் 5-வது தெருவில் வாறுகால் மேடுபள்ளமாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
-சுரேஷ், கிருஷ்ணாபுரம்.