'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சேதமடையும் அபாயம்
திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்துவில் இருந்து ரெட்டியப்பட்டி செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படாததால் சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரியப்பன், தோட்டனூத்து.
எரியாத தெருவிளக்கு
தாடிக்கொம்புவை அடுத்த காப்பிளியபட்டி தேவேந்திரகுல வேளாளர் நகரில் உள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் இருக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்கை விரைவில் சரிசெய்ய வேண்டும்.
-மகுடீஸ்வரன், காப்பிளியபட்டி.
அறிவிப்பு பலகை வேண்டும்
ரெட்டியார்சத்திரம் தாலுகா கோனூர் அருகே சின்னப்பபுரம் ஊர் எல்லைப்பகுதியில் ஊரின் பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. மேலும் அந்த பகுதியில் 2 இணைப்பு சாலைகள் இருக்கின்றன. இதனால் வெளியூரில் இருந்து வாகனங்களில் அந்த ஊருக்கு வருபவர்கள் சின்னப்பபுரத்துக்கு செல்லும் வழி தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனவே ஊர் எல்லைப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-அமலா, சின்னப்பபுரம்.
பள்ளி முன்பு தேங்கும் கழிவுநீர்
நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சி குளத்துப்பட்டியில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துமாரி, குளத்துப்பட்டி.
மின்கம்பம் சீரமைக்கப்படுமா?
தேனியை அடுத்த வருசநாடு பவளநகர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அப்பகுதியில் இருந்த மரம் சாய்ந்து சாலையோரத்தில் இருந்த மின்கம்பம் மீது விழுந்தது. இதில் சேதமடைந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. ஆனால் தற்போது வரை அந்த மின்கம்பம் சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலா, வருசநாடு.
சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்
புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் அருந்ததியர் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே விரைவில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
-ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
பாதியில் நிறுத்தப்பட்ட கால்வாய் பணி
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.
திறந்த நிலையில் ஆழ்துளை கிணறு
திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு தற்போது பயன்பாடு இன்றி திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்கள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் கிடக்கும் ஆழ்துளை கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு சத்ரியன், பொன்மாந்துரை புதுப்பட்டி.
பல்லாங்குழி சாலையால் அவதி
கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த பல்லாங்குழி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.
-சுதா, கம்பம்.
கால்களை பதம் பார்க்கும் சாலை
கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் தார்சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. தார் பூச்சுகள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிவதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகளின் கால்களை பதம் பார்க்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், கடமலைக்குண்டு.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.