தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

மின்னல்வேக நடவடிக்கை

சேலம் முள்ளுவாடிகேட் தண்டவாளத்தை ஒட்டி சாலையை கடக்கும் இடத்தில் பெரிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கிளைகள் உயர்அழுத்த மின்சார கம்பியை ஒட்டி சென்றன. தற்போது அடிக்கடி மழை பெய்வதாலும், காற்று வீசுவதாலும் மின் வயர்கள் மரக்கிளைகள் மீது உரசினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து சில மணி நேரத்தில் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். உடனே மின்வயர்களை ஒட்டி சென்ற மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாாட்டு தெரிவித்தனர்.

-பூபதி, அன்னை இந்திராநகர், சேலம்.

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த தார்சாலை

ஓசூரில் அன்னை நகர் பகுதியில் இருந்து எஸ்.எம்.நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அங்குள்ள தார்சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-மஞ்சுநாத், ஓசூர்.

குரங்குகள் தொல்லை

கிருஷ்ணகிரியை சுற்றி அமைந்துள்ள மலைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் அடிக்கடி நகருக்குள் வருகின்றன. அவ்வாறு வரக்கூடிய குரங்குகள் மின் கம்பிகளில் ஆபத்தான முறையில் தொங்குவதுடன், மின்சாரம் தாக்கி இறந்த சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதுதவிர குடியிருப்புக்குள் செல்லும் குரங்குகள் பூந்தொட்டிகள், வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. எனவே நகருக்குள் தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனிராஜ், கிருஷ்ணகிரி.

குடிநீர் பிரச்சினை

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த போடயம்பட்டி பாளையத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதுபற்றி பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்க வேண்டும்.

-யஸ்வந்தராவ், போடயம்பட்டி பாளையம், தர்மபுரி.

ஆபத்தான பள்ளம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பைபாஸ் செல்லும் மெய்யனூர் இட்டேரி சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்ள இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இந்த வழியாக செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.

-ராஜா, மெய்யனூர், சேலம்.

அதிவேகம் ஆபத்து

சேலம் பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை பெரியார் வளைவு, சின்னகடை வீதி, மிலிடரி ரோடு, குமரகிரி பைபாஸ் ஆகிய பகுதிகளில் பஸ்கள் அதிவேகமாக வருகின்றன. அந்த பகுதிகளில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடனே கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட பகுதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து பஸ்கள் மிதமான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அடைக்கனூர், மாட்டுகரனூர் கிராமத்தில் ஏரகுட்டிகட்டுவளவு பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லை. நீண்ட காலமாக உப்பு தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சாலை மற்றும் தெருவிளக்கு வசதியும் செய்து தரப்படவில்லை. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

-நாகராஜன், ஓமலூர், சேலம்.

சாலையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

சேலம் ஜாகீர்சின்ன அம்மாபாளையம் 19-வது வார்டுக்குட்பட்ட போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதானல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த மரங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயகுமார், 19-வது வார்டு, சேலம்.


Next Story