தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், துவாக்குடி மலை (தெற்கு) காமராஜர் வளைவு, செடிமலை முருகன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அப்பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் இந்த கழிப்பறை கட்டப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பொது இடங்களில் இயற்கை உபாதை கழித்து வந்த நிலையில், இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மூடப்பட்டு இருந்த கழிவறையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், துவாக்குடி, திருச்சி.

மாற்று நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?

திருச்சி செந்தண்ணீர்புரத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணி வரை எந்த பஸ்சும் வருவதுதில்லை. அதே சமயத்தில் 2 பஸ்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. இதனால் காலை நேரத்தில் கல்லூரி, பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்களை தனித்தனியாக குறித்த நேரத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெரியசாமி, சங்கிலியாண்டபுரம், திருச்சி.

கால்நடை மேயும் இடமாக மாறிய ரெயில் நிலைய வளாகம்

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடமாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி மதிப்பில் ரெயில் நிலையம் மேம்பாடு செய்யப்பட்டு ரெயில் நிலைய வளாகத்தில் அழகுக்கான புல்தரை மற்றும் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், பராமரிப்பு என்பது சரிவர இல்லை என்பதே உண்மை. திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் முகப்பு தோற்றத்தில் செல்பி எடுக்கும் பகுதியில், நேற்று மாலை ரம்மியமான வேளையில் புல்தரையின் அழகை ரசிக்க முடியாத வகையில் கால்நடைகள் திரிவதும், புற்களை மேய்ந்து கொண்டும் சீரழித்துக் கொண்டிருந்தது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சார்லஸ், புத்தூர், திருச்சி.

சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை

திருச்சி உறையூர் வாலாஜா ரோடு பகுதியில் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு காய்கறி மட்டுமின்றி மீன், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் அந்த பகுதிக்கு உட்பட்ட மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து காய்கறிகள் மற்றும் இறைச்சிகளை வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில் இங்கு செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளில் ஈக்கள் மொய்த்து காணப்படுகிறது. மேலும் அந்த மார்க்கெட் பகுதியில் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உறையூர், திருச்சி.


Next Story