தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்


'தினத்தந்தி'க்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரை அடுத்த வண்டிகாரன்காடு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பொதுகழிப்பிடம் உள்ளது. அந்த கழிப்பிடத்தின் அருகே செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளித்தது. அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த பகுதியில் இருந்த செடி, கொடிகளை அகற்றி பொதுமக்களின் அச்சத்தை போக்கினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-கோபி, பிள்ளாநல்லூர், நாமக்கல்.

மீண்டும் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி சாலையில் அச்சமங்கலம், கொண்டப்பநாயப்பள்ளி கூட்ரோடு பகுதியில் நிழற்கூடம் ஒன்று இருந்தது. அதில் பொதுமக்கள் அமர இருக்கைகளும் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு அந்த நிழற்கூடத்தின் மீது லாரி மோதி நிழற்கூடம் சாய்ந்து போனது. பின்பு மர்ம மனிதர்கள் அந்த நிழற்கூடத்தை அடையாளம் தெரியாத வகையில் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் வெயில், மழைக்காலங்களில் நிழற்கூடம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் அந்த இடத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

-சுகுமார், ஜெகதேவி, கிருஷ்ணகிரி.

தார்சாலை புதுப்பிக்கப்படுமா?

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை அருகே தொடங்கும் தார்சாலை தர்மபுரி- சேலம் பைபாஸ் சாலையுடன் இணைகிறது. இந்த சாலையை கல்லூரி, மாணவ- மாணவிகள், கோர்ட்டுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தார் சாலையின் பெரும்பகுதி சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் தட்டுத் தடுமாறி செல்கின்றன. அந்த தார் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திவாகர், தர்மபுரி.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ஓட்டகுளம் தெருவில் இருந்து சாலையூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. அந்த புதுப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-திவாகர், சேந்தமங்கலம், நாமக்கல்.

சேறும், சகதியுமான சாலை

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி முதல் முனியப்பன் கோவில் வழியாக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார்சாலை உள்ளது. அந்த சாலை மிகவும் சேதமடைந்து, மழைநீர் தேங்கி நிற்கும் அளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டு, மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மழை நீர் தேங்கி நிற்பதால் சாலையோரம் உள்ள குடியிருப்பவர்களுக்கு நோய் நொற்று ஏற்படும் சூழல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்சாலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சி.செல்வம், மேட்டுப்பட்டி, சேலம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

சேலம் மாவட்டம் மெய்யனூர் மெயின் ரோட்டில் இருந்து வி.எம்.ஆர். நகர் செல்லும் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அள்ளி சுத்தமாக வைக்க செய்ய வேண்டும்.

-விவேக், வி.எம்.ஆர். நகர், சேலம்.

சாக்கடை கால்வாயில் டிரான்ஸ்பார்மர்

சேலம் மாநகராட்சி முத்தவல்லி முகமது பாகூப் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டன. அந்த பள்ளத்தின் அருகே உயர் மின் அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. இதனால் பள்ளத்தின் அருகே பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டால் சரி செய்ய கடும் சிரமப்பட வேண்டி இருக்கிறது. மேலும் பள்ளத்தின் அருகே டிரான்ஸ்பார்மர் இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமர், 4 ரோடு, சேலம்.

தெருநாய்கள் தொல்லை

சேலம் மாநகரங்களில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. சில நேரங்களில் வாகனங்களில் இருந்து விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சண்டை போடுவதால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.

-வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.


Next Story