தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

கண்காணிப்பு கேமரா அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவது வழக்கமாகிறது. ஆங்காங்கே கொலை மற்றும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாக நடப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மணப்பாறையில் முக்கிய சாலையான செவலூர் பிரிவில் உலக புகழ் பெற்ற மாட்டு சந்தை நடைபெறுவதால் சுமார் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் வழி நெடுங்கும் வரிசையாக நிறுத்தப்படுவதினால் அதிகளவில் விபத்துகள் நடைபெற்று உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மணப்பாறையில் மிகவும் முக்கியமான சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணப்பாறை, திருச்சி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி, காஜாபேட்டை மெயின் ரோடு பூந்தோட்டம் தெருவில் அமைந்துள்ள புனித மோட்ச ராக்கினி மாதா ஆலய முகப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பூந்தோட்டம், திருச்சி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி பீமநகர் கணபதிபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே மழை நீர் தேங்கி நிற்பதால் இதிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுபாஷினி, கணபதிபுரம், திருச்சி.

சாலையில் பள்ளம்

திருச்சி- புத்தூர் நால்ரோடு சந்திப்பு சிக்னல் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பெரிய அளவிலான விபத்து நடைபெறும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமிநாதன், திருச்சி.


Next Story