தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் மூங்கித்தாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் திருமயத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்தநிலையில் நீதிமன்றம் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் எந்த அரசு பஸ்களும் நிற்பதில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சுரேஷ், திருமயம், புதுக்கோட்டை.
ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் மேலகாந்திநகர் 2-ம் வீதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிர் சேதம் ஏற்படவும் அதிகவாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரனூர்.