தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மலைவீதி பகுதியில், புன்செய் புகழூர் பேரூராட்சி சார்பில் 2007-2008-ம் ஆண்டில், பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு, சிறுவர்கள் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் 2 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. அங்கு விளையாட்டு திடலில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்தும், பூங்காவில் சிறுவர்கள் விளையாடியும் தங்களது பொழுதை கழித்து வந்தனர். இந்தநிலையில் பூங்கா சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாமல் பூட்டப்பட்டது. தற்போது வரை பூங்கா திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே பூங்காவை உடனடியாக பராமரிப்பு செய்து திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.
பாலத்தை அகலப்படுத்த வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மைலாடி இரட்டை வாய்க்கால் பாலமானது ஒரு பாலமாக கட்டி முடிக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. பழைய பாலம் அகலப்படுத்தப்படாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த பாலத்தை அகலப்படுத்தி வலுவாக கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குளித்தலை, கரூர்.