தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதியில் கரூர்- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள், மருத்துவக்கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் மருத்துவகழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
முருகேசன் புன்னம்சத்திரம்.
ஆபத்தான பள்ளம்
கரூர்- சேலம், சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை முதல் தவிட்டுப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மிகவும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேம்பாலம் அமைக்கும் பணிக்காக இரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு சர்வீஸ் சாலை ஓரத்தில் நெடுகிலும் ஆபத்தான நிலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனத்துடன் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்கவும், சர்வீஸ் சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சரவணன், பாலத்துறை.