தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை நகராட்சி 42-வார்டு அசோக்நகர் விரிவாக்கம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து, தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அசோக்நகர், புதுக்கோட்டை.
நாய்கள் தொல்லை
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கீழராஜ வீதி, மேலராஜ வீதி, நீதிமன்றம், பழைய மற்றும் புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.