தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தட்டுப்பாடு
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடசேரி ஆதிதிராவிடர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நலன்கருதி அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதில் இருந்து பொதுமக்கள் குடிநீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றவில்லை. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை வாய்மொழியாகவும், மனு மூலமாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தோகைமலை
கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு
கரூர் மாநகரின் பல சாலைகளில் கால்நடைகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றன. மேலும் சாலையிலேயே படுத்துக்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் மாடுகள் சாலையில் படுத்து இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கால்நடைகள் மீது வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்