தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி, கீரீப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மகேஷ்வரன், கீரிப்பட்டி.

ஆபத்தான பள்ளம்

திருச்சி மாநகராட்சி, பெரிய மிளகுபாறை ஆதிதிராவிடர் தெரு ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோவில் பின்புறம் சாலையின் நடுவே பாதாள சாக்கடை உடைந்து பள்ளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் தெரியாமல் அதனுள் விழுந்து உயிர் இழப்பு கூட ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரியமிளகுபாறை

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி ஊராட்சி, வடக்கிப்பட்டியில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தினமும் சீகம்பட்டியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பட்டியில் இருந்து சீகம்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள், வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஆனந்தகுமார், வடக்கிப்பட்டி.

தகவல் பலகை வைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர்(அப்பு) ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் ெவளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். ஆனால் இக்கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி முழுமையாக அவர்களால் அறிந்து கொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே அனைவரது பார்வைக்கும் தெரியும்படி சிவன் சன்னதி கொடிமரம் அருகே தமிழ், ஆங்கில மொழியில் தகவல் பலகை வைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

ரமேஸ்வரன், திருவானைக்காவல்

மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் இருந்து கான்வென்ட் ரோடு வழியாக செல்லும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். திருச்சியில் கனமழை பெய்யும் போது மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி விடும். அது போன்ற சமயங்களில் அனைத்து வாகனங்களும் மேலப்புதூர் மார்சிங்பேட்டை, பீமநகர் பகுதியை கடந்து தான் பாலக்கரை பாலம் வழியாக சென்று வருகின்றன. பீமநகர் மார்சிங்பேட்டை சாலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போது மாற்றுப்பாதையாக பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கேயும் மழை தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் எந்த வழியாக செல்வது என தெரியாமல் அவதி அடைகிறார்கள். ஆகவே பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சாக்கடைகளை தூர்வாரி மழை தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பீமநகா்


Next Story