தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

தார்சாலையாக தரம் உயர்த்தப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இருந்து கொல்லாபுரம் வரையுள்ள மண்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த மண் சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படுமா?

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி வழியாக திருச்சி முதல் சிதம்பரம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி (தேளூர் பாலம்) உப்பு ஓடை அருகே சர்வீஸ் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே புதிய வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசி அதன் அருகே சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், நெல்லித்தோப்பு கிராமத்தில் தொண்டமான் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியில் இருந்து செல்லும் வடிகால் வாய்க்காலும் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, த.சோழன்குறிச்சி ஊராட்சி நடுத்தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடை அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உடையார்பாளையம்.

மின்மோட்டார் சீரமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் கிராமத்தில் மூப்பனார் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பி அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின்மோட்டார் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெற்றியூர்.


Next Story