தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குவிந்து கிடக்கும் குப்பைகள்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை பன்றிகள் கிளறி விடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முத்துக்குமார், திருவப்பூர்.

அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி டி.இஎல்.சி. சாலையில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆஸ்பெட்டாஸ் கூரை போடப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் மிகவும் பழுதடைந்த ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் அச்சத்துடனேயே இந்த மையத்தில் குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். எனவே ஆபத்தான இந்த அங்கன்வாடி மையத்தை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் .

பொதுமக்கள், கறம்பக்குடி

வாரச்சந்தைக்கு நிரந்தர கட்டிடம் தேவை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முக்கண்ணாமலைப்பட்டி -புதூர் மற்றும் முக்கண்ணாமலைப்பட்டி- வவ்வாநேரி இணைப்பு சாலையில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை தொடங்கப்பட்டது. இந்தநிலையில் முக்கண்ணாமலைப்பட்டியை சுற்றி பல்வேறு கிராமங்கள் இருப்பதால் நாளடைவில் வாரச்சந்தை சூடுபிடிக்க தொடங்கியது கடைகளும் அதிக அளவு வருவதால் சந்தை நடக்க போதிய இடம் இல்லாததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை கடைகளை உருவாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முக்கண்ணாமலைப்பட்டி.

சேதமடைந்த பழைய போலீஸ் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம். இலுப்பூரில் தாலுகா அலுவலகத்திற்கு முன்புறம் போலீஸ் நிலையம் இருந்தது நாளடைவில் இந்த போலீஸ் நிலைய கட்டிடம் பழுந்தடைந்து விட்டதால் அதன் அருகிலேயே புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டுவிட்டது. பின்பு பழைய இடத்தில் இருந்த போலீஸ் நிலைய கட்டிடத்தை அப்படியே விட்டு விட்டதால் சேதமடைந்து, அந்த பகுதியில் மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இலுப்பூர்.

நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருமயம்.


Next Story