தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குளத்தில் கலக்கும் கழிவுநீர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் அம்மன் குளம் உள்ளது. இக்குளமானது மாதிரிப்பட்டி, கலிங்கிப்பட்டி, சின்னபழனிபட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் எண்ணை கழிவுகளை இங்கு வந்து சிலர் ஊற்றிவிட்டு செல்கின்றனர். இதனால் குளத்து நீரானது மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த நீரால் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், விராலிமலை.
பாலத்தின் நடுவே மெகா பள்ளம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், பணம்பட்டி ஊராட்சி மருதாந்தலை சாலையில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுவே ஒரு இடத்தில் உடைந்து மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பணம்பட்டி.
சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுவான இடம் ஒன்று இல்லை. இதனால் பல லட்சம் செலவு செய்து தனியார் திருமண மண்டபங்களை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு பொது சமுதாயக்கூடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், நத்தம் பண்ணை.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், காரமங்களம் ஊராட்சி, தேனிப்பட்டி கிராமத்தில் இருந்து நல்லகுறிச்சி , கொக்கு வெள்ளையன் காடு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதனால் தற்போது சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள். கொக்கு வெள்ளையன் காடு
ஊர்பெயர் பலகை வைக்க கோரிக்கை
புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் இருந்து சாந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நேராக சென்றால் தஞ்சாவூருக்கு சென்று விடாலம். ஆனால் சிலர் அப்பகுதியில் தஞ்சாவூர் செல்லும் வழி என்று ஊர் பெயர்பலகை இல்லாதாதல் தஞ்சாவூருக்கு செல்பவர்கள் சாந்தநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் திரும்பி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு கால விரயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான ஊர்பெயர்பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை