தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கோவில் புனரமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில் ஶ்ரீசீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிலமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலத்துடையான்பட்டி.
குடிநீர் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், புதூர் 55-வது வார்டு தெற்கு யாதவர் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்தும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புதூர்.
எரியாத மின்விளக்குகள்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பழங்காவேரி, சேரன் நகர், பாரதி நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் உள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அந்தநல்லூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம்
திருச்சி மாவட்டம், வடக்கு காட்டூர் பாரதிதாசன் 6-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளத்தால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலு, வடக்கு காட்டூர்.
விளையாட்டு மைதானம் வேண்டும்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கு என்று தனியாக விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பதால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சீனிவாசன், திருவெள்ளறை.