தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்களால் விபத்து அபாயம்
திருச்சி மாவட்டம், உய்யகொண்டான் திருமலை, வயலூர் மெயின்ரோடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள கால்நடைகளை கடிக்க பாய்கின்றன. மேலும், அப்பகுதி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் கடிக்க பாய்வதால் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உய்யகொண்டான் திருமலை.
கழிவுநீர் வாய்க்கால் சுத்தப்படுத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், குமரன் நகர் பகுதியில் எராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வயலூர் சாலையோரம் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்காலில், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குமரன் நகர்.
தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள்
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி கடை வீதியில் இருந்து பொன்னேரிபுரம் செல்லும் சாலையில் காந்தி நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் மேல் தாழ்வாக மின்சார கம்பிகள் கடந்து செல்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பொன்மலைப்பட்டி.
மழைநீர் வடிகால் வேண்டும்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியில் மழை காலங்களில் மழைநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர், கழிநீருடன் கலந்து வீடுகளுக்கு புகுந்து வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பாலத்தில் மெகா பள்ளம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கீழ குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி மேல தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. தற்போது பாலம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதி கிராம பகுதி என்பதால் கால்நடைகள் அதிகமாக இருப்பதால் கால்நடைகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீழகுறிச்சி.