தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர், சாய்பாபா கோவில் அருகில் உள்ள சாலையின் ஓரத்தில் ஒரு கழிவுநீா் வாய்க்காலில் தண்ணீர் பாசி பிடித்தும், குப்பைகளாலும் மாசுபட்டு உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட கழிவுநீா் வாய்க்கால் மற்றும் அதில் கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் பரவி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி கழிவுநீா் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கரூர்.

சமுதாய கூடம் வேண்டும்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பாலவிடுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழாக்கள் நடத்துவதற்கு பொதுவான இடம் இல்லை. இதனால் ஊராட்சி சார்பாக ஒரு சமுதாய கூடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பாலவிடுதி.

தெருநாய்கள் தொல்லை

கரூர் மாவட்டம், நச்சலூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முருகன், நச்சலூர்.

பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள காந்தி சிலை அருகே திருச்சி - கரூர் செல்லும் சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக நின்று பஸ்சில் பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். ஆனால் இந்த நிழற்குடை பகுதியில் எந்த பஸ்களும் நிற்பதில்லை. அதற்கு மாறாக பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரம் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி இறக்கி விடப்படுகின்றனர். இதனால் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பயனற்று பலர் இளைப்பாறும் இடமாக மாறிவிட்டது. எனவே இந்தப் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே பஸ்களை நிறுத்திச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், குளித்தலை.

பயன்பாட்டிற்கு வராத சேவை மையம்

கரூர் மாவட்டம், திருக்காடுதுறை ஊராட்சி சார்பில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் ஆலமரத்துமேடு நூலகம் அருகில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. விவசாயிகள், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், பல்வேறு சான்றிதழ்களை பெற்று பயனடையும் வகையில் இந்த சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலமரத்துமேடு.


Next Story