தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலை ஓரமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர பதாகைகள் வைப்பதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் முற்றிலுமாக பதாகை வைப்பது தடை செய்யப்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் கவனச்சிதறல் இல்லாமல் வாகனங்கள் ஓட்டிச் சென்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சாலை ஓரங்களில் தொடர்ந்து ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பதாகைகளை பார்த்துக் கொண்டே செல்வதால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் காற்று, மழை காரணமாக சாலைகளில் சாய்ந்தாலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் சாலை ஓரங்களில் பதாகைகள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் இருந்து இடையன் வயல் கிராமத்திற்கு செல்லும் 2 கிலோ சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வே முடியவில்லை. மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
நூலகத்தை சரிசெய்ய கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், வாசகர்கள் வந்து புத்தகங்கள் மற்றும் செய்தி தாள்களை படித்து செல்கின்றனர். இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாசகர்கள் நூலகத்திற்கு வருவதற்கு சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரனூர்.
ஊர்பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதியில் சாலை ஓரங்களில் ஊர்பெயரை குறிக்கும் வகையில் ஆங்காங்கே ஊர் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த பலகைகளில் அனைத்தும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
மாணவ-மாணவிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வெண்ணவால்குடி ஊராட்சி வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சேற்றில் இறங்கி நடந்து செல்கிறது. இதனால் சில நேரங்களில் வழுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வள்ளிக்காடு.