தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான பயணிகள் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பயணியர் வசிக்காக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழகுடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானலும் பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அதனை இடித்து புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆதனக்கோட்டை.

தேங்கி நிற்கும் மழைநீர்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கும்மங்குடியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மழைநீர் செல்வதற்கு வடிகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் சிறிய மழை பெய்தால் கூட பள்ளி முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பள்ளியை சுற்றி மழைநீர் வடிகால் வசதி செய்து தர கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கும்மங்குடி.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி-மறுப்பினி சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தொடர் மழையின் காரணமாக தண்ணீரை வெளியேற்றுவதற்கு கடந்த ஆண்டு சாலை உடைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சாலையை சரிசெய்யவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுப்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வெட்டுக்காடு கிராமம் மகுதுப்பட்டி குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பழைய கோவிலின் தெற்கு பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரேனும் மின்கம்பியை தொட்டால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மகுதுப்பட்டி.


Next Story