தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

நிழற்கூடை கட்டித்தர கோரிக்கை

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் அரசு டவுன் பஸ் சென்று வருகின்றன. அதியமான் கோட்டை பிரிவு சாலை எதிரே பல ஆண்டுகளுக்கு நிழற்குடை போடப்பட்டது. இதனால் தற்போது சிதலடைந்து பயனற்று போய் உள்ளது. மேலும் பயணிகள் அமர்வருக்கு போடப்பட்ட சிமெண்டு பலகைகளையும் மர்மநபர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள பயணிகள் தார் சாலை ஓரத்தில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புன்னமசத்திரம்.

அதிக ஆழமாக வெட்டப்பட்டுள்ள கல்குவாரிகள்

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம், உப்புப்பாளையம், பசுபதிபாளையம், தென்னிலை, பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன .பல்வேறு கல்குவாரிகள் அரசு அனுமதி அளித்ததற்கு மேல் குழி தோண்டப்பட்டு கற்கள் வெட்டப்பட்டு வருகிறது. பல கல்குவாரிகள் அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு வருகிறது. சாலை ஓரத்தில் உள்ள கல்குவாரி பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது நிலை தடுமாறி அளவுக்கு அதிகமாக ஆழத்தில் உள்ள கல்குவாரிகளில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர் கதையாக உள்ளது. எனவே கனிமவளத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், உப்புப்பாளையம்.

கோவிலுக்கு சுற்றுச்சுவர் வேண்டும்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே சேமங்கியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் 18 பட்டி கிராம பொதுமக்களின் குலதெய்வமாக உள்ளது. மாரியம்மன் கோவில் தார் சாலை ஓரத்தில் இருந்ததன் காரணமாக மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள ஒரு இடத்தில் புதிதாக கட்டப்பட்டது. அதன் கும்பாபிஷேகம் நடைபெற்று சில ஆண்டுகள் ஆகிறது. இக்கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். புதிதாக கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலுக்கு சுற்று சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் கோவில் பாதுகாப்பற்ற நிலையில் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்.

கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடி-கொடிகள்

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் பகுதியில் இருந்து புங்கோடை வரை செல்லும் உபரிநீர் கால்வாயின் வழியாக விளைநிலங்களில் இருந்து வெளியேறும் நீர் செல்லும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் மூலம் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மழை நீரும் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உபரிநீர் கால்வாய் முழுவதும் நெடுகிலும் சம்பு மற்றும் பல்வேறு வகையான செடி கொடிகள் ஆலுயரம் முளைத்து உபரி நீர் கால்வாய் வழியாக மழை நீர் மற்றும் விவசாய உபரி நீர் செல்ல முடியாமல் ஊருக்குள் சென்று வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உபரிநீர் கால்வாயில் முளைத்துள்ள சம்பு மற்றும் பல்வேறு செடி கொடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குளத்துப்பாளையம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தேர் திருவிழாவை முன்னிட்டு பூசாரிஅப்பன் அரிவாள் மேல் ஏறி முக்கிய வீதியில் வழியாக வருவதும், தேரோட்டம் நடைபெறுவதும் வழக்கம். இந்நிலையில் நொய்யல் பகுதியில் தேரோட்டம் மற்றும் பூசாரி அப்பன் அரிவாள் மீது ஏறிவரும் தார் சாலை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக குண்டும் குழியுமாக உள்ளது .இந்த வழியாக பள்ளி வாகனங்கள் ,கார்கள், டிராக்டர்கள் ,இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன .அதேபோல் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெறுகிறது . எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.


Next Story