தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சி அலுவலகம் அருகே ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இப்ப விழுமோ?எப்ப விழுமோ? என்ற நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள்,நங்கவரம்.

நாய்கள் தொல்லை

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய்கள் சுற்றி வருகிறது. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி செல்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களின் முன் பகுதியில் வந்து விழுகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தாந்தோணிமலை.

பாதியில் நிற்கும் கட்டுமான பணிகள்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் விவசாயிகளின் நலன் கருதி தரைத்தளத்தில் சிமெண்டால் விவசாயக்களம் கட்டப்பட்டது. மழை காலங்களில் மழை நீர் களத்துக்குள் செல்வதன் காரணமாக உயரமாக புதிய களம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் களம் கட்டும் பணி பாதியிலேயே நின்றுவிட்டது . சில ஆண்டுகள் ஆகியும் களம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. இதனால் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைவித்த விளைபொருட்களை களத்திற்கு கொண்டு வந்து காய வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், முத்தனூர்.

பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள காந்தி சிலை அருகே திருச்சி - கரூர் செல்லும் சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக நின்று பஸ்சில் பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். ஆனால் இந்த நிழற்குடை பகுதியில் எந்த பஸ்களும் நிற்பதில்லை. அதற்கு மாறாக பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரம் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி இறக்கி விடப்படுகின்றனர். இதனால் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பயனற்று பலர் இளைப்பாறும் இடமாக மாறிவிட்டது. எனவே இந்தப் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே பஸ்களை நிறுத்திச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், குளித்தலை.

மூடப்பட்ட ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் நொய்யலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிலையம் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி, கரூர் மற்றும் ஈரோடு, கோவை, பாலக்காடு செல்லும் பயணிகள் ஏறி இறங்கி வந்தனர். இந்நிலையில் பயணிகள் ரெயிலில் ஏறி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ரெயில் நிலையம் பூட்டப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நெரய்யல்


Next Story