தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:
பயனற்ற அடிபம்பு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளுர் கிராமம் அம்பேத்கர் நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அடிபம்பு ஒன்று போடப்பட்டது. தற்போது அடிபம்பு பழுதடைந்து கடந்த ஒரு மாதமாக பயன்று கிடக்கிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஒகளூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி கிராமத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், செஞ்சேரி.
மது விற்பனை தடுக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம், மேலமாத்தூர், எலந்தங்குழி மதுராகுடிக்காடு, தொண்டபாடி ,மங்கலம் ஆகிய கிராமங்களில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் வாலிபர்கள் பலர் காலை நேரங்களில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலமாத்தூர்.
ஏரிக்கரைக்கு சாலை அமைக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், எசனை ஏரிக்கரை பாதை மோசமாக காட்சியளிக்கிறது. மேலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரையில் முட்புதர்களை அகற்றி புதியதாக தார் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், எசனை.
போதிய அளவு குடிநீர் வினியோகிக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகம்மதுபட்டினம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடு்ம்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை அரை மணி நேரம் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் போதிய அளவு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
பொதுமக்கள், வேப்பந்தட்டை.