தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

புதுக்கோட்டை

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், வேம்பங்குடி மேற்கு ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பலர் கடந்த 2 மாதங்களாக 100 வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் 100 வேலை வழங்கினர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

வேகத்தடை வேண்டும்

புதுக்கோட்டை-விராலிமலை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காலாடிபட்டி சத்திரம் கிராமம். இந்த கிராமம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் பல ஊர்களின் முக்கிய சந்திப்பாகும். இந்த சந்திப்பில் நகர, புறநகர மற்றும் தொலைதூர பஸ்கள் அனைத்தும் நின்று செல்கின்றன. அதுமட்டுமின்றி எந்நேரமும் கனரக வாகனங்கள், லாரிகள் சென்ற வண்ணம் உள்ளது. இதனால் சாலையை கடக்க பெண்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே கலாடிப்பட்டி சத்திரம் மெயின்ரோட்டில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.

அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதிகளில் அளவுக்கு அதிகமான அளவில் லாரிகளில் தேங்காய் ஊறி மட்டைகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் தேங்காய் மட்டைகள் சாலைகளில் சிதறி ஆங்காங்கே சிதறி விழுகிறது. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.

நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும்மக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அன்னவாசல்.

புதர்மண்டி காட்சியளிக்கும் குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பகுதியில் பொதுப்ணித்துறைக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட பெரிய பாசன குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன. இந்த பாசன குளங்களில் சீமை கருவேல மரங்கள் முளைத்து புதர்மண்டி கிடக்கின்றன. குளங்களின் வரத்து வாரிகளிலும் இந்த கருவேல மரங்கள் படர்ந்துள்ளன. இதனால் மழை பெய்தாலும் பாசன குளங்களில் தண்ணீர் தேங்குவதில்லை. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே பாசன குளங்களில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கறம்பக்குடி.


Next Story