தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாற்று பாதை வேண்டும்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உழவர்சந்தை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தனால் அப்பகுதியில் வாகன செல்ல முடியாத அளவிற்கு ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் செல்வதற்கு வாகன ஓட்டிகள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பாலம் அமைக்கும் இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கவும், பணியை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.
சாலை வசதி வேண்டும்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா கருப்பத்தூர் பஞ்சாயத்திற்குட்ட வைகோநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசி்த்து வருகின்றனர். இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் மழை காலங்களில் நடந்து செல்லவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கருப்பத்தூர்.
தடுப்புகள் அமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்காலில் கான்கிரீடால் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் இரு பக்க பக்கவாட்டிலும் எந்தவிதமான தடுப்புகளும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாய்க்காலுக்குள் விழுந்து விடும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே இந்த பாலத்தின் இரு பக்க பக்கவாட்டிலும் தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், குளித்தலை.
மருத்துவமனை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவது முறைப்படுத்தப்படுமா?
கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. மேற்படி மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், நோயாளிகளும் மேற்படி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் செல்கின்றனர் மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த நிலையில் மேற்படி அரசு மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் அனைவருக்கும் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் நுழைவாயிலில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் இதர வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்.
வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வடிகால் சீரமைக்கும் பணிகள் மற்றும் புதிதாக வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கரூர் தாந்தோணி மலையில் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மேற்கண்ட பணிகள் ஆமை வேகத்தில் மெதுவாக நடைபெற்று வருவதால் இதற்கு எதிரே உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படி வடிகால் அமைக்கும் பணிகளை தாமதமின்றி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தாந்தோணிமலை.