தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பஸ் படிக்கட்டியில் ஆபத்தான பயணம்

திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து திருச்சிக்கு தினமும் காலையில் வரும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிலர் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காலை நேரங்களில் முசிறியில் இருந்து திருச்சிக்கு கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டிக்கட்டில் தொங்குபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிராஜுதீன், முசிறி.

சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள கீழ புலிவார்டு சாலையின் இருபுறமும் லாரிகள் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிகழ்வும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், சத்திரம்.

தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

திருச்சி செந்தண்ணீா்புரம் வள்ளூவா் நகா் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்தண்ணீர்புரம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

திருச்சி கே.கே.நகர் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் மருத்துவ தேவைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கும், உறையூரில் உள்ள மருத்துவமனைக்கும் நேரடியாக சென்றுவர போதுமான பஸ் வசதி இல்லாததால் 2 பஸ்களில் மாறி, மாறி பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள நோயாளிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கே.கே.நகரில் இருந்து உறையூர் வழியாக கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தியாகராசன், கே.கே.நகர்.


Next Story