தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவறை வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இவ்வழியாக பல்வேறு ஊர்களுக்கு பொதுமக்கள் தினமும் கூலி வேலைக்கும் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். வி.கைகாட்டி வழியாக செல்லும் கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைவரும் இயற்கை உபாதைக்கும், சிறுநீர் கழிப்பதற்கும் ஒதுங்க கூட போதிய கழிவறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வி.கைகாட்டியில் இலவச கழிவறையோ அல்லது கட்டண கழிவறையோ அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.
சாலையில் மெகா பள்ளம்
அரியலூர் மார்க்கெட் தெருவில் உள்ள பள்ளியின் நுழைவாயில் தென்புறப் பகுதியின் சாலையில் மெகா பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி எப்போதும் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அரியலூர்.
உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இரவு நேரங்களில் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைவீதியில் காத்து கிடக்கின்றனர். இதனால் கடைவீதி பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சரவணன், மீன்சுருட்டி.
குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
அரியலூர் மாவட்டம், நெல்லித்தோப்பு கிராமத்தில் தொண்டமான் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியில் இருந்து செல்லும் வடிகால் வாய்க்காலும் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.