தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, நெட்டவேலம்பட்டில் பொதுமக்களின் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் அமைக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நெட்டவேலம்பட்டி.
வேகத்தடை வேண்டும்
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பஸ் நிலையம் அருகே 4 சாலைகள் சந்திக்கும் முக்கம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பள்ளிகள், மருத்துவமனை, கோவில், பள்ளிவாசல் உள்ளன. இதனால் இந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றனர். இதனால் தினமும் இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே 4 சாலைகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், துவரங்குறிச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நடுபட்டி கிராமத்தில் இருந்து ஆலம்பட்டி வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும், நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மணிகண்டம்.
குடிநீர் வசதி வேண்டும்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், மேக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னக்கருப்பூர் கிராமத்தில் கடந்த 16 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்து குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சச்சின், மேக்குடி.
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. மேலும், வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கார்த்திக், திருவெறும்பூர்.