தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

வடிகால்கள் ஆக்கிரமிப்பு

பெரம்பலூர் மாவட்டம், கோவில்பாளையம் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கனமழை பெய்யும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முருகேசன், அண்ணாநகர்.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகோள்

பெரம்பலூர் டவுனில் இருந்து எளம்பலூர் புறவழிச்சாலை முதல் சென்னை பைபாஸ் சாலை வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முகப்பு முதல் ரோவர் நூற்றாண்டு சாலை வரை புதிதாக சாலை மேம்படுத்தப்பட்டு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு தெருவிளக்குகள் வைக்கப்பட்டது. இதனால் தற்போது சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது எளம்பலூர் ஏரிக்கரை அருகே வளைவுகள் நேர்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ரோவர் நூற்றாண்டு சாலையை போல ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி முகப்பு முதல் உப்பு ஓடை வரை சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்து தெருவிளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

புதர்மண்டிய வாரச்சந்தை

பெரம்பலூர் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்மண்டி காணப்படும் இடத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமம் ஆண்டியான் குட்டை பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க பாய்கிறது. மேலும் கால்நடைகளை கடித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குரும்பலூர்.


Next Story