தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

தற்காலிக பாலம் அகற்றப்பட்டது

தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட சந்தவிளையில் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் பணி நடைபெற்ற போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், பழைய தற்காலிக பாலம் அகற்றப்படாமல் இருந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்காலிக பாலத்தை அகற்றினர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் அரசு பஸ்கள் சுங்கான்கடை பகுதியில் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றன. இதனால் பஸ்சுக்கு பின்னால் வரும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை வேளைகளில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.அரவிந்த், சுங்கான்கடை.

எரியாத மின்விளக்கு

பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு சந்திப்பில் சூரிய சக்தி மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு பழுதடைந்து கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரத்்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை அகற்றிவிட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்.சோபனராஜ், மிடாலக்காடு.

பஸ்கள் இயக்கப்படுமா?

குளச்சல் பணிமனையில் இருந்து திங்கள்நகர் வழியாக நாகர்கோவிலுக்கு 5 பி.வி., 5 ஏ.வி. ஆகிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேலும் இந்த வழியாக குறைவான பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்திய பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

சேதமடைந்த சாலை

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரியில் இருந்து கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலை உள்ளது. இ்ந்த சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

சீரமைக்க வேண்டும்

கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு கன்னக்குறிச்சியில் கருனாகுளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் பாயும் மதகு மற்றும் தடுப்பணை, படித்துறை உடைந்து காணப்படுகிறது. இதனால் குளத்தில் தண்ணீர் தேங்குவது இல்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் மதகு, தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆல்வின், வடக்கு கன்னக்குறிச்சி.


Next Story