தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டில் செ.சுனா. வீதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரிமளம்.
சாக்கடை கால்வாய் மூடப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் கீரனூர் செல்லும் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் ஒன்று மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் தளம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்னவாசல்.
பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைக்குடிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் கர்ப்பிணிகள், முதியவர்கள் தினமும் பஸ் நிலையத்தில் இருந்து சுகாதார நிலையம் வரை ஒரு கிலோ நடந்து செல்கின்றனர். எனவே பஸ்கள் அனைத்தும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
சண்முகசுந்தரம், மலைக்குடிபட்டி.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் கிராமத்தில் இருந்து க.புதுப்பட்டி வழியாக வலையபட்டி-உலகம்பட்டி இணைப்பு சாலை வரை செல்லும் 2 கிமீ தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கண்டியாநத்தம்.
தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பேரூராட்சி பகுதியில் பிரதான சாலையோரங்கள் முதல் தெருசாலை ஓரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் காய்யச்சல் மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதான சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் சாலையோற தண்ணீருக்காக வாகனங்கள் ஒதுங்கும் போது விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீரமங்கலம்.