தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கள்ள விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் மீது சில மர்மநபர்கள் பள்ளிக்குள் வந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளியை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஒகளூர்.

மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்படும் மின்மாற்றி இருக்கும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மின்மாற்றியில் ஏதேனும் மின் பழுது ஏற்பட்டால் அதனை செய்வதற்கு செல்லும் சாலை பகுதி மிகவும் மோசமாக உள்ளது. மழைகாலங்களில் அந்த பகுதிக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் அல்லது மின்மாற்றியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வரகூர்.

ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயங்குகின்றன. ஆனால் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தம் இல்லாத பகுதிகளிலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால் அதன் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் ஷேர் ஆட்டோக்களை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

குமார், பெரம்பலூர்

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு கல்லூரிக்கு வந்து செல்ல சரியான அரசு பஸ் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பெரம்பலூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்களும் பயணிகள் நிறைந்து கூட்டமாகவே வருகிறது. அந்த பஸ்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற முடிவதில்லை. ஏறினால் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இலவச பஸ் பாஸ் இருந்தும் மாணவ-மாணவிகள் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் கல்லூரி முடிந்து வீடுகளுக்கு அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் செல்வோரிடம் லிப்டு கேட்டும், சிலர் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கல்லூரி தொடங்கும், முடியும் நேரத்தில் அந்த வழியாக கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்கள், பெரம்பலூர்.

காட்சி பொருளாக மாறிய தண்ணீர் தொட்டி

பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் வடக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி உள்ளது. அதில் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு தேவைக்கு தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது தண்ணீர் தொட்டி பயன்பாடில்லாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story