தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்


குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் ரெயில்வேட் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குளத்துப்பாளையம்.

பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

கரூர் மாவட்டம். தோட்டக்குறிச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் இடிக்கப்பட்டது. தற்போது தோட்டக்குறிச்சியில் உள்ள இரு சமுதாயக் கூடங்களை பள்ளி வகுப்பறையாக மாற்றி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சமுதாயக்கூடத்தில் இடம் பற்றாக்குறையாக இருப்பதால் அங்குள்ள மரத்தடியில் மாணவர்கள் பாடம் கற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழரசன், தோட்டக்குறிச்சி.

நூலகத்திற்கு கழிப்பறை வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் செயல்படும் இடத்தில் சரியான பாதை, சாலை வசதி இல்லாமல் உள்ளது. மழை காலமான இந்தநேரத்தில் 108 ஆம்புலன்ஸ் அவசர நேரத்தில் எடுக்க முடியாமல் சேற்றிலும், சகதியிலும் சிக்கி மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது. மேலும் கிளை நூலகம் வரும் வாசகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் கழிப்பறை இன்றியும் மிகுந்த மனஉளைச்சல் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறாம்.

பாலமுருகன், வெள்ளியணை.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக ஏமூருக்கு செல்லும் சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தார்சாலையாக மாற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு மண்ணை சமன்படுத்தி, அதன்மேல் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பட்டது. அதன் பின்பு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் பயணிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பணியை முடிக்க வேண்டும் என ஏமூர், ஏமூர் நடுப்பாளையம், சீத்தப்பட்டி, கற்பகா நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஏமூர்.

வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆறு ரோடு என்ற பகுதி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் புதிதாக போடப்பட்ட தார்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.


Next Story