தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

வடிகால் வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தண்ணீர்ப்பள்ளி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கழிவுநீர் வாய்க்கால் இல்லை. இதனால் கழிவுநீர் அனைத்தும் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நவடடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தண்ணீர்ப்பள்ளி.

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தில் உள்ள கடைகளில் உபயோகப்படுத்திய பிளாஸ்டிக் கவர்கள், மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ கழிவுகள், காய்கறி கடைகளில் உள்ள அழுகிய காய்கறிகள், கோழிக்கழிவுகள் என ஏராளமான கழிவு குப்பைகளை மூட்டை, மூட்டையாக கொண்டு வந்து தார் சாலையின் ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழரசன், புன்னம் சத்திரம்.

அதிகவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பல்வேறு வகையான பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் உள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் சென்டர் மீடியாவை உடைத்து அந்த வழியாக கார்கள் ,லாரிகள், வேன்கள்,இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனத்தால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள சென்டர் மீடியாவை இடித்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்து விபத்தினை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்

தார்சாலை வசதி கிடைக்குமா?

கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம்,காக்காவாடி,பாகநத்தம்,கே.பிச்சம்பட்டி,மூக்கணாங்குறிச்சி,மணவாடி,ஏமூர்,உப்பிடமங்கலம் மேல்பாகம், உப்பிடமங்கலம் கீழ்பாகம், வெள்ளியணை வடபாகம்,வெள்ளியணை தென்பாகம், ஜெகதாபி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களை பதிவு செய்ய வெள்ளியணையில் பத்திரபதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு கரூர் வெள்ளியணை சாலையில் இருந்து பிரிந்து மண் சாலை செல்கிறது .இந்த மண் சாலையானது குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியாகவும் உள்ளதால் பத்திர பதிவு அலுவலகத்திற்கு வாகனங்களில் வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர் . எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்கள், வெள்ளியணை.

அடிப்படை வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி ஓமாந்தூர் கிழக்கு வாரி பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஓமாந்தூர்.


Next Story