தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

மூடப்பட்ட வாகன நிறுத்துமிடம்

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையத்தில் நாள்தோறும் விரைவு ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் உட்பட பதினாறுக்கு மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கிறது. அதனால் நாள்தோறும் பல ஆயிரகணக்கான பயணிகள் இந்த ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் காண்ட்ராக்ட் முடிந்து விட்டதால் அதை தற்போது மூடியுள்ளனர். விரைவில் அதிகாரிகள் வாகனம் நிறுத்தும் இடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதனால் குளித்தலை, முசிறி, தொட்டியம், துறையூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் ரெயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும் நாள்தோறும் திருச்சி மற்றும் கரூர் பகுதிகளுக்கு கல்லூரி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் வேலைக்கு செல்பவர்களும் பெரிதும் பயனடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுந்தர், குளித்தலை

தார் சாலை வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள அரசு கிளை நூலகம், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் ஆகியவை செயல்படும் இடத்தில் சாலை வசதி இல்லை. இதனால் மழைபெய்யும்போது இந்த வழியே அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மீறி சென்றால் வாகனத்தில் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலமுருகன்,

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் மாநகராட்சி தான்தோன்றி மலை நகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் நான்கு வழி சாலை உள்ளது. இதில் நான்கு புறமும் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முருகன், தான்தோன்றிமலை .

அடிபம்பை சரிசெய்ய கோரிக்கை

கரூர் மாவட்டம், பாலவிடுதி கிழக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு அடிபம்பில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அடிபம்பில் பழுது ஏற்பட்டதால் அதனை கழற்றி விட்டு சென்று விட்டனர். ஆனால் இதுநாள் வரை அதனை சரி செய்யவில்லை. இதனால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பாலவிடுதி.

உப்பாக வரும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த உள்ளாட்சி பகுதிகளில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக மரவாபாளையம் காவிரி ஆற்றில் வட்டை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அங்கிருந்து குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு காவிரி ஆற்று குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் காவிரி ஆற்றில் 5 முறை வந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக பொதுமக்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வழங்காமல் ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் ஏற்றப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் இந்த குடிநீரை முழுமையாக பயன்படுத்த முடியாமல் உள்ளனர் .அதேபோல் குடிநீர் உப்பு தண்ணீராக இருப்பதால் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தமிழரசன், நொய்யல்.


Next Story