தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மயானகொட்டகையின் மேற்கூரை சீரமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பழைய விராலிப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மயான கொட்டகையின் மேற்கூரை சிதிலமடைந்தும், சுற்றுச்சுவர் இடிந்தும் காணப்படுகிறது. மேலும் இந்த மயானத்திற்கு செல்லும் பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் மாலை நேரங்களில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலகுரு, பழைய விராலிப்பட்டி.
கழிவறை வசதி வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கழிவறை வசதி இல்லாததால் அனைத்து தரப்பினரும் ஊரின் மையப்பகுதியில் உள்ள திறந்த வெளியில் மலம் கழிக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்ட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவறை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், லாடபுரம்.
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர் வழியாக பொண்ணகரம் வரை இயக்கப்படும் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்கு சென்று வரும் பெண்கள் என கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிலர் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த வழிதடத்தில் மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இடையில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், செங்குணம்.
கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குன்னம்.
போக்குவரத்திற்கு இடையூறு
பெரம்பலூர் டவுன் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி ஆர்ச் பகுதியில் இருந்து எளம்பலூர் வரையுள்ள சாலையில், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டைகளில் ஆங்காங்கே இளைஞர்கள் இரவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்துவதினால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனை பெரம்பலூர் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், பெரம்பலூர்.