தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் பஸ்களில் சென்று திருச்சி, தஞ்சை பகுதிகளில் படித்து வருகினறனர். இந்தநிலையில் ஏலாக்குறிச்சியில் காலை நேரங்களில் சரியான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தனபால், திருமானூர்.
எரியாத மின்விளக்குகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் 4 மின்கம்பங்கள் உள்ளது. இதில் ஒன்றும் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியா மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.
மயான கொட்டகை சரிசெய்யப்படுமா?
அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் கிராமம் புதுக்காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள யாரேனும் இறந்தால் அவர்களை எரிப்பதற்கு மாயனா கொட்டகை இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், முத்துசேர்வாமடம்.
சேதமடைந்த வடிகால் மதகு
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உபரிநீர் செல்லும் வடிகால் மதகு 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் சேதமடைந்த வடிகால் மதகை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ரெட்டிபாளையம்.
கடைவீதியில் சுற்றித்திரியும் பன்றிகள்
அரியலூர் மாவட்டம், செந்துறை கடைவீதியில் நாள்தோறும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், கடைக்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செந்துறை.