தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், அனவயல் தடியமனை பகுதியில் முக்கரை விநாயகர் கோவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் பிளாஸ்டிகள் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அனவயல்.
சேதமடைந்த குடிநீர் குழாய்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், வானதிராயன்பட்டி ஆதிதிராவிட காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள குடிநீர் குழாயை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வானதியான்பட்டி.
ஊர் வழிகாட்டி பலகை சரிசெய்யப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து சத்திரம் செல்லும் சாலையில் ஊர் வழிகாட்டி பலகை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஊர் பெயர் தெரியாமல் திணறி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர் வழிகாட்டி பலகையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.
நகர பஸ் இயக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் பஸ்களில் வெளியூர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி தினமும் காலை 9 மணிக்கு தொண்டைமான் ஊரணியில் இருந்து கந்தர்வக்கோட்டைக்கு நகர பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆதனக்கோட்டை.
பள்ளமாக மாறிய சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல்-கீரனூர் சாலையில் சாக்கடை செல்லும் கால்வாய் சுவர் பழுதடைந்து விழுந்து விட்டது. இதனால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அன்னவாசல்.