தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மண் குவியலால் போக்குவரத்திற்கு இடையூறு
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலையின் இருபுறங்களில் மண் குவியல்கள் அதிகமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி போலீஸ் நிலையம் அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து வருகின்றனர். மேலும் பொதமக்கள், முதியவர்கள் நடந்து செல்வே முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்யா, அரிமளம்.
ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு வருமா?
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி 8-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களின் நலன்கருதி அந்த பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறும், ரூ.7 லட்சத்தில் குடிநீர் குழாயும் கடந்த ஓராண்டு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது வரை அவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கார்த்திவர்மன், காரக்கோட்டை.
தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
புதுக்கோட்டையில் மழை பெய்யும் போது மின்சார வாரிய அலுவலகம் அருகே சாலையில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதேபோல மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் மின்கட்டணம் செலுத்தக்கூடிய பகுதியின் அருகேயும் மழைநீர் தேங்குகிறது. இதில் மழைநீர் தேங்காமல் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், புதுக்கோட்டை.
இருளில் மூழ்கி கிடக்கும் சாலை
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் நகர் செல்லக்கூடிய சாலையில் இரவில் தெரு விளக்குகள் எரியாமல் சில நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதேபோல ஆயுதப்படை மைதானம் வழியாக புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லக்கூடிய சாலையிலும் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், புதுக்கோட்டை.