தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் ஆபத்து

கரூர் மாவட்டம் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறையில் இருந்து தவிட்டுப்பாளையம் செல்லும் சர்வீஸ் சாலையின் அருகே சமைத்த வாத்துக்கறியுடன் சிற்றுண்டி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு இந்த சர்வீஸ் சாலை வழியாக பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம் ,திருச்செங்கோடு , பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் கார்கள் மற்றும் லாரி டிரைவர்கள் சாலையின் ஓரங்களிலேயே நெடுகிலும் லாரிகள், கார்களை நிறுத்தி விட்டு சாப்பிட சென்று விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாலத்துறை.

நிழல் குடை அமைத்து தரகோரிக்கை

கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் நடையனூர் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் ஏறி செல்வதற்காக சாலை ஓரத்தில் வெயிலிலும் மழையிலும் நின்று பேருந்தில் ஏறி சென்று வருகின்றனர். இப்பகுதியில் பேருந்துகளுக்கு செல்லும் பயணிகள் நிழல்குடையில் அமைர்ந்து செல்ல நிழல் குடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நடையனூர்.

மண்சாலை தார் சாலையாக மாற்றப்படுமா?

கரூர் மாவட்டம். ஒரம்புப்பாளையத்தில் இருந்து கவுண்டன்புதூர் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. அதன் பிறகு ரெயில்வே சாலையை ஒட்டி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளது. தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஒரம்புப்பாளையம்.

வேகத்தடையால் விபத்து

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பசுபதிபாளையத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிக்கு செல்வதற்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்சாலையின் குறுக்கே ஒரு குறிப்பிட்ட சிலர் தேவையற்ற முறையில் வேகத்தடையை உயரமாக அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே தார் சாலையின் குறுக்கே போடப்பட்டுள்ள வேகத்தடையை அகற்றி விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புன்னம்.

ரவுண்டானாவை சீரமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மலைவீதி ரவுண்டானா வழியாக சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து நொய்யல் வழியாக கொடுமுடி, ஈரோடு, கோவை ,அரவக்குறிச்சி ,பழனி செல்லும் அனைத்து பேருந்துகள், பல்வேறு ரகமான லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இந்த வழியாக செல்கிறது. இந்த ரவுண்டானா மிகவும் அகலமாக இருப்பதால் பெரிய லாரிகள் திரும்பும்போது இந்த ரவுண்டானாவில் அடிக்கடி மோதி ரவுண்டானா உடைந்து வருகிறது. இதனால் இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் திரும்பும்போது கற்கள் கிடப்பது தெரியாமல் அதில் மோதி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது .மேலும் கீழே விழும் போது வேகமாக வரும் பெரிய வாகனங்கள் கீழே விழுந்தவர் மீது மோதி உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைந்து சிதறி கிடக்கும் கற்களால் விபத்து ஏற்படாமல் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புகழூர்.


Next Story