தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

வேகத்தடைகளில் வர்ணம் தீட்டப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக வேகத்தடைகள் உள்ளது. ஆனால் அந்த வேகத்தடைகள் இருப்பதற்கு அடையாளமாக அதில் வெள்ளை நிற வர்ணம் தீட்டப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பதே தெரியாமல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயத்துடன் எழுந்து செல்வது தொடர் கதையாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, காரை.

நோயாளிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடத்தில் அலட்சியத்துடன் காணப்படுகின்றனர். இதனால் நோயாளிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தங்கதுரை, கொளக்காநத்தம்.

மூடப்படாத பள்ளம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகே கூத்தனூர் செல்லும் சாலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் கூட்டு குடிநீர் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதனை சரி செய்ய பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. கசிவு சரி செய்யப்பட்டநிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடாமலேயே காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பள்ளத்தின் அருகே எந்தவொரு முன்னெச்சரிக்கை தடுப்புகளும் வைக்கப்படவில்லை. எனவே எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பு போர்க்கால அடிப்படையில் பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரவிந்த், நாட்டார்மங்கலம்.

ஜவுளி பூங்கா அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் துணிகள் தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள் தயார் செய்து வருகின்றனர். எனவே பாடாலூர் அருகே ஜவுளி பூங்கா அமைத்தால் இவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேலவன், பாடாலூர்.

பனை விதைகள் நட கோரிக்கை

தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தை பாதுகாக்க தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் கடந்தாண்டு வெளியிட்டுள்ளது. மழையை ஈர்க்கும் மையங்களாகவும், நீர் நிலைகளின் காவலனாகவும், மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பராமரிப்பதிலும் பனை மரங்கள் முக்கிய பங்காற்றுவதே இதற்கு முக்கிய காரணங்களாகும். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் அய்யனார் கோவில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு 100 நாள் வேலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை கொண்டு பனை விதைகளை சேகரித்து, அதனை அவர்களை கொண்டு ஏரி கரைகளில் நடவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு, ஊராட்சி நிர்வாகம் வலியுறத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஆர்வலர்கள், நாட்டார்மங்கலம்.


Next Story