தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள ரேஷன் கடையில் 1,700 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில் வெங்கடேசபுரம் தெற்கு, சுந்தர் நகர், பாலக்கரை, வெங்கடாஜலபதி நகர், எம்.எம்.நகர், சிதம்பரம் நகர், சித்தர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மெயின் ரோட்டை கடும் சிரமத்துடன் கடந்து ரேஷன் கடைக்கு வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். எனவே அந்த குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள ரேஷன் கடையை 2 ஆக பிரித்து 6-வது வார்டு பகுதியில் புதிய ரேஷன் கடை ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

புதா்மண்டி கிடக்கும் மாவட்ட கலெக்டா் அலுவலகம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

அங்கன்வாடி மையம் தூய்மை செய்யப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா ஓலைப்பாடி புதுகாலனி அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. அந்த மையத்தில் குழந்தைகள் பலர் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மையத்தை சுற்றி செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மையத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே மையத்தை தூய்மைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

பூட்டியே கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

பெரம்பலூர் மாவட்டம், புது அம்மாபாளையம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கழிப்பிட வசதி இல்லாமல் பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பாலகுரு, பழையவிராலிப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினமும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழைவும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் உள்ளே செல்லும் பஸ்கள் சிரமத்துடன் சென்று வருகிறது. மேலும், மழைகாலங்களில் இந்த குண்டும், குழியுமான இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story