தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்ந்துவரும் ஊரணி
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி மட்டையன்பட்டி கிராமத்தில் அம்மா ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணி தூர்வாரப்படாத நிலையில் தற்போது சம்புகள், புற்கள் முளைத்த நிலையில் தூர்ந்துபோய் வருகிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த ஊரணியில் மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அம்மா ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேஸ்கண்ணா, மட்டையன்பட்டி
பன்றிகள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி, திருநகர், எஸ்.கே.நகர், ஈட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகிறது. இந்த பன்றிகள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை கிளறி வருகிறது. சில நேரங்களில் வீடுகளுக்குள்ளேயும் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மேட்டுப்பட்டி
செயல்படாத ஏ.டி.எம். மையம்
கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் பகுதியில் பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். கடந்த 20 நாட்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் பணம் போடுவது, எடுப்பது போன்ற பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பணம் எடுக்க வங்கிகளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த ஏ.டி.எம். மையம் பழுது இன்றி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கறம்பக்குடி.
குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், குண்றான்டார் கோவில், மூட்டாம்பட்டி ஊராட்சியில் சம்பாகுளம் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளனர். இதனால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மூட்டாம்பட்டி.
குடிநீர் பற்றாக்குறையால் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம், கல்யாணராமபுரம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற இடங்களுக்கு தண்ணீரை பிடிக்க சென்றாலும் அங்கும் சரியாக கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் கடும் சிரம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், கல்யாணராமபுரம்.