தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குண்டும், குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, புள்ளம்பாடி திருச்சி-சிதம்பரம் சாலையில் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் அருகில் தார்சாலை உள்ளது. இந்த தார்சாலை சேதம் அடைந்து பெரிய அளவிலான பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. இதனால் விபத்துகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புள்ளம்பாடி.

பஸ் இயக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம்,சமயபுரம் அருகே உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூருக்கும், லால்குடியில் இருந்து அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்திற்கும் அரசு சார்பில் பஸ் இயக்கப்பட்டால் பயண நேரம் குறையும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

ஆசைத்தம்பி, கோமாகுடி.

குடிநீர் வசதி வேணி்டும்

திருச்சி மாநகராட்சி, 13-வது வார்டுக்குட்பட்ட வடக்கு ஆண்டார் வீதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் வினியோகம் சீராக நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமி நாதன், திருச்சி.

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க கோரிக்கை

திருச்சி மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட திம்மராய சமுத்திரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்த வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஒராண்டிற்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ரமணா, திருச்சி.

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, நத்தம் கிராமம் மீனாட்சி சொக்கநாதர் கோவில், பெருமாள் கோவில்கள் அருகில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இன்றி உள்ளது. இதனால் பக்தர்கள் பயத்துடன் கோவிலுக்கு வரவேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சண்முகவேல், கூன்ராக்கம்பட்டி.


Next Story