தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 9176128888 என்ற செல்போன் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் வருமாறு:-

திருநெல்வேலி

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பாரதி நகர் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள தெருவில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

அம்பை யூனியன் வாகைக்குளம் பஞ்சாயத்து 6-வது தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே குழாய் உடைப்பை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-கிருஷ்ணமூர்த்தி, வாகைக்குளம்.

* நெல்லை தொண்டர் சன்னதியில் காய்கறி கடை அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-மதுரா, நெல்லை.

ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?

நெல்லை மேலப்பாளையம் நத்தம் ரெயில்வே கேட் வழியாக தினமும் ஏராளமான ரெயில்கள் கடந்து செல்கின்றன. அப்போது ரெயில்வே கேட்டை மூடுவதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க எடுப்பார்களா?.

-ஜெயினுலாப்தீன், நெல்லை.

குண்டும் குழியுமான சாலை

அம்பை யூனியன் அடையகருங்குளம் பஞ்சாயத்து மின்நகர் மின்னொளி விநாயகர் கோவில் எதிரே உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நிகழுகின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-முத்துகுமார், மின்நகர்.

பயணிகள் நிழற்கூடம் தேவை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா முதலூர் பஞ்சாயத்து ராஜமன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றினர். பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-தங்கராஜ், ராஜமன்னார்புரம்.

தடுப்பு கம்பி அமைக்கப்படுமா?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வள்ளி குகை அருகில் கடற்கரையில் சுமார் 1 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் கடலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

பஸ் வசதி தேவை

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ராஜபதி, ஆத்தூர் வழியாக சேர்ந்தபூமங்கலத்துக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கினால், பல்வேறு கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும், கிராம மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எனவே புதிய வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சண்முகவேல், காயல்பட்டினம்.

பஸ் நிலையத்தில் ராட்சத பள்ளம்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பஸ் நிலைய நுழைவுவாயில் மற்றும் பஸ்கள் வெளியே செல்லும் பாதையிலும் ராட்சத பள்ளங்களாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-பாலமுருகன், கோவில்பட்டி.

ஒளிராத மின்விளக்கு

வல்லநாடு முத்தாரம்மன் கோவில் முன்பு நான்குவழிச் சாலையோரம் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதையடுத்து அதனை சரி செய்வதற்காக உயர்கோபுரத்தில் இருந்த மின்விளக்குகளை கீழே இறக்கி வைத்தனர். பின்னர் அதனை சரி செய்யாமல் பணிகளை கிடப்பில் போட்டு சென்றனர். இதனால் பல மாதங்களாக இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-நங்கமுத்து, வல்லநாடு.

புகார்பெட்டி செய்தி எதிரொலி;

மின்விளக்கு அமைப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் மாயமான்குறிச்சி பஞ்சாயத்து 3-வது வார்டு வாணியர் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்ததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன எதிரொலியாக அங்கு புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரக்கேடு

புளியங்குடி டி.என்.புதுக்குடி பாம்புகோவில் சந்தை சாலை தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மகேந்திரன், டி.என்.புதுக்குடி.

தடம் மாறும் பஸ்சால் மாணவர்கள் அவதி

சுரண்டையில் இருந்து கட்டேறிபட்டி, புங்கம்பட்டி, மயிலப்புரம் வழியாக பாபநாசத்துக்கு இயங்கி வந்த அரசு பஸ் (வழித்தட எண்:-313) கடந்த சில நாட்களாக மேட்டூர் வழியாக சென்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தடம் மாறும் அரசு பஸ்சை உரிய வழித்தடத்தில் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பாலாஜி, கட்டேறிபட்டி.

போக்குவரத்து நெருக்கடி

செங்கோட்டை மெயின் பஜார் வழியாக கேரள மாநிலத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இதனால் காலை, மாலையில் கடும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

பஸ் நிறுத்தத்தை மறைத்த டிஜிட்டல் பேனர்

கடையம் யூனியன் கடையம்பெரும்பத்து பஞ்சாயத்து வெய்க்காலிபட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடத்தின் முன்பாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது அங்கு பஸ் நிறுத்தத்தை மறைத்தவாறு டிஜிட்டல் பேனரும் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்துக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?.

-அற்புத ஜெகன் பிரகாஷ், வெய்க்காலிபட்டி.


Next Story